விராலிமலை தொகுதியில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி


விராலிமலை தொகுதியில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி
x
தினத்தந்தி 1 April 2021 11:47 AM IST (Updated: 1 April 2021 11:47 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை தொகுதியில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்துள்ளார்.

அன்னவாசல், 

விராலிமலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் வாக்குசேகரித்தார். அன்னவாசல் பஸ்நிலையத்தில் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

விராலிமலை தொகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் எனது சொந்த செலவில் தமிழகத்திலேயே முதன்முறையாக ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் தொடங்குவேன். தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் தொகுதிக்கு உட்பட்ட 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன். 

அதுமட்டுமின்றி 15 ஆயிரம் பெண்களுக்கு மலம்பட்டி, குளத்தூர், அன்னவாசல் பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுப்பேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி செலவை நான் ஏற்பேன். தொகுதி முழுவதும் வீடுதோறும் சுகாதாரத்தை காக்கும் மரங்களை வளர்ப்பவர்களுக்கு மரக்கன்றுகள், கூண்டுகள் வாங்கித் தருவேன். சிறப்பாக பராமரித்து வளர்ப்போருக்கு பரிசுகளையும் வழங்குவேன். 

என்னால் எந்த சமூகத்தினருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. நான் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்ததில்லை. யாரையும் தாக்கியும், குறை சொல்லியும் பேசியதில்லை. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக என் உயிரையே கொடுப்பேன். என் வாழ்நாள் முழுவதும் விராலிமலை மக்களுக்காக உழைப்பேன். எனவே இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Next Story