மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமைய போகிறது உளுந்தூர்பேட்டையில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமைய போகிறது உளுந்தூர்பேட்டையில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 11:09 PM IST (Updated: 2 April 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமையபோகிறது என்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


தேர்தல் பிரசாரம்

உளுந்தூர்பேட்டை பஸ்நிலையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு எம்.எல்.ஏ.வை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

பின்தங்கிய மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக நான் வைத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இதற்காக நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகவும் பின் தங்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல குமரகுரு எம்.எல்.ஏ.வுக்கு வாக்களித்து அவரை சட்டமன்றத்துக்கு அனுப்பவேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையபோகிறது. 

எண்ணற்ற தி்ட்டங்கள்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதற்குத் தீர்வாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வின் தேர்தல் அறிக்கைகளில் எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால்  தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து எதுவும் சொல்லவில்லை. 

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு அமுதசுரபி, பா.ம.க.வின் தேர்தல் வளர்ச்சிக்கான ஆயுதம். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வருடத்துக்கு 6 சிலிண்டர் என்றால் கிட்டத்தட்ட ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் மிச்சமாகிறது. இதுமட்டுமல்ல குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, வீட்டுக்கு வாஷிங் மெஷின் என குடும்பத் தலைவிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பழைய ஓய்வுதிய முறை

மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழையஓய்வூதிய முறை வழங்கப்படும். இது மட்டுமல்ல அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.  இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்த்து மக்கள் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story