கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு நாட்டுப்புற கலைஞர்கள் மனு


கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு  நாட்டுப்புற கலைஞர்கள் மனு
x
தினத்தந்தி 10 April 2021 1:20 AM IST (Updated: 10 April 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளதால் கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு நாட்டுப்புற கலைஞர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்: 

நாடக, நாட்டுப்புற கலைஞர்கள்
கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. 

இதில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கத்தினர் நேற்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். 

பின்னர் கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதுபற்றி அவர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் கலைத்தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டது. 

கடந்த 2020-ம் ஆண்டு முழுவதும் தொழில் செய்ய முடியாமல், பொருளாதார ரீதியாக சிரமப்பட்டோம். தற்போது கட்டுப்பாடுகள் நீங்கி வேலை கிடைத்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இது நாடகம், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பெரிதும் பாதிக்கும். அதோடு வாழ்வதற்கும் வழியில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, விழாக்களில் விதிகளை பின்பற்றி கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், என்றனர்.

பந்தல் அமைப்பாளர்கள்
அதேபோல் ஒலி-ஒளி, பந்தல் மேடை அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி-ஒளி, பந்தல் மேடை அமைப்பாளர்கள் தொழில் செய்கிறோம். 

கடந்த ஆண்டு கொரோனாவால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஓரளவு வேலை கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பாதிக்கப்படுவோம். 

அதேநேரம் தியேட்டர் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு 50 சதவீத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் எங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story