மதுரையில் ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று

மதுரையில் ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று
மதுரை,ஏப்.
மதுரையில் ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கோடை வெயில் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 6,711 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இங்கு கடந்த 15 தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வந்தது. அதில் உச்சமாக நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா ெதாற்று கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 மாதங்களுக்கு பிறகு
கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று கொரோனா பாதிப்பு இரட்டை சதத்தை தொட்டுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 180 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 23 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது, இதுவரை 23 ஆயிரத்து 208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோல், நேற்று 53 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 40 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 21 ஆயித்து 392 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
தற்போது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,345 ஆக உயர்ந்துள்ளது. படிப்படியாக பாதிப்பு உயர்வதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகள் அமைக்கும் பணி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்கிறது.
4500 பேருக்கு பரிசோதனை
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
வரும் காலங்களிலும் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிற்கு பொதுமக்களுக்கும் இருக்கிறது. பொதுமக்கள் இனியும் தாமதித்தால் பேராபத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மதுரையில் நாளொன்றுக்கு 4500 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்தும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதிக பாதிப்புகள் இருக்கும் தெருக்களை கண்டறிந்து, மாநகராட்சி அதிகாரிகள் மூடி வருகின்றனர். இதுபோல் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஆங்காங்கே காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி அவசியம்
மதுரையை பொறுத்தமட்டில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தகுதி உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story