கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது
x
தினத்தந்தி 13 April 2021 5:02 PM IST (Updated: 13 April 2021 5:02 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அமமன் கோவில் பங்குனி திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
பங்குனி திருவிழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 5- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலையில் அம்மன், சாமி திருவீதி உலா மற்றும் மண்டகப்படி தாரர்கள் சார்பில் நடந்து வந்தது.
கடந்த 10-ம் தேதி முதல் கொரோனா இரண்டாவது சுற்று பரவல் காரணமாக கோவில் விழாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக நேற்று கம்மவார் சங்கம் சார்பில் நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று ஒன்பதாம் திருவிழாவை ஒட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 8 மணிக்கு விளா பூஜையும், 9 மணிக்கு கோவில் முன் மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து கம்மவார் சங்க நிர்வாகிகளுடன் சுவாமி அம்பாள் வீதி உலா கோவில் வெளிப்பிரகாரத்தில் எளிமையாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவகலைப் பிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தெப்பத்திருவிழா ரத்து
இன்று (புதன்) மாலை 6 மணி அளவில் தீர்த்தவாரித் திருவிழா கோவில் அரங்கில் வைத்து, ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் எளிமையாக கொண்டாடப்படுகிறது.
நாளை (வியாழன்) தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் மற்ற நிகழ்ச்சிகள் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகளுடன் கோவிலில் வைத்து நடத்தப்பட இருக்கிறது.

Next Story