2 கண்டெய்னர் லாரிகள் புகுந்ததால் பரபரப்பு


2 கண்டெய்னர் லாரிகள் புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2021 4:00 AM IST (Updated: 14 April 2021 4:00 AM IST)
t-max-icont-min-icon

2 கண்டெய்னர் லாரிகள் புகுந்ததால் பரபரப்பு

கோவை

கோவை வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி. கல்லூரிக்குள் 2 கண்டெய்னர் லாரிகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

வாக்கு எண்ணும் மையம்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலையில் உள்ள, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு (ஜி.சி.டி.) கொண்டு வரப்பட்டன. 


அங்கு பிரத்யேக காப்பு அறைகளில் (ஸ்டாரங் ரூம்) மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 கண்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி. கல்லூரிக்குள் புகுந்தன. அதை அங்கிருந்த முகவர்கள் கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர். 

இரவு நேரத்தில் 2 கண்டெய்னர் லாரிகள் உள்ளே புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த முகவர்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். 

வாக்குவாதம்

உடனே நா.கார்த்திக் மயூரா ஜெயக்குமார், குறிச்சி பிரபாகரன், சண்முக சுந்தரம், கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜி.சி.டி. கல்லூரிக்கு விரைந்து வந்தனர். 

அவர்கள், கண்டெய்னர் லாரிகளை சோதனையிட்ட னர். இதில், அது கண்டெய்னர் லாரி அல்ல மகளிர் போலீசார் பயன் படுத்தும் நடமாடும் கழிவறை வாகனம் என்பது தெரியவந்தது.

அப்போது, தி.மு.க. வேட்பாளர்கள், இரவு நேரத்தில் ஏன் நடமாடும் டாய்லெட் வாகனங்களை கொண்டு வரவேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

 இதைத்தொடர்ந்து அந்த 2 வாகனங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்துக்கு இரவு நேரத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story