பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 22 April 2021 2:06 AM IST (Updated: 22 April 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

ராமநவமி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது

மதுரை
ராமநவமி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
ராமநவமி
ஸ்ரீராமநவமியை முன்னிட்டு மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் உள்ள ராமர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின்னா ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சுவாமிகள் கோவிலை வலம் வந்தனர். அதே போன்று மதுரையில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேலும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் லட்சுமணர் சீதை அனுமார் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து, முக கவசம் அணிந்து கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விழாவில் பக்தர்கள் ராமர் பக்தி பாடல்கள் பாடி இறைவழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
டி.கல்லுப்பட்டி 
டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள ஸ்ரீவீர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு ராம பக்தரான ஆஞ்சநேயருக்கு  பால், தயிர், இளநீர், மஞ்சள்பொடி, உள்பட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் கும்ப பூஜைகள் செய்தும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ராமநவமி முன்னிட்டு பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் பழமை வாய்ந்த கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட  நவநீத பெருமாள் கோவிலில் ராமநவமி விழா நடந்தது. விழாவையொட்டி பெருமாளுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார். மேலும் தொட்டில்அமைத்து அதில் ராமர் குழந்தை வடிவில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அந்த தொட்டிலை பெண் பக்தர்கள் தாலாட்டு பாடல்பாடி ஆட்டி மகிழ்ந்தனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் முக கவசம் அணிந்து குறைந்தஅளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்சகர் கண்ணன் செய்திருந்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ரெயில்வே பீடர் ரோடு வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ராமபிரான் அளித்த சாபவிமோசனங்கள், ராமாயணத்தில் நால்வர், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், விதியும் மதியும் என்ற தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. விழாவையொட்டிகோவிலின் கருவறையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. மேலும் ஆஞ்சநேயருக்கு தங்கக் கவச அலங்காரம் அணிவிக்கப்பட்டது. இதேபோல ராமர் சீதைக்கு கருவறையில் பட்டாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் சன்னதியில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவச சாத்துபடி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story