கும்கி யானைக்கு மதம் பிடித்தது


கும்கி யானைக்கு மதம் பிடித்தது
x
தினத்தந்தி 23 April 2021 8:44 PM IST (Updated: 23 April 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

தேவாலா பகுதியில் காட்டுயானைகளை விரட்ட வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்தது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா பகுதிக்குள் அவ்வப்போது 2 காட்டுயானைகள் புகுந்து, அட்டகாசம் செய்து வந்தன. இந்த காட்டுயானைகளை விரட்ட முதுமலையில் இருந்து உதயன், ஜான், வில்சன் உள்ளிட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. 

தொடர்ந்து ரவுஸ்டன் மலைப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானைகளை விரட்டும் பணி நடைபெற்று வந்தது. அங்கிருந்து தேவாலா பகுதிக்குள் நுழைய முயன்ற அந்த காட்டுயானைகளை பலமுறை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் தடுத்தனர். 

அதன்பின்னர் காட்டுயானைகள் கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டன. இருப்பினும் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்தது. பாகன்களை கூட அருகில் வர விடாமல் விரட்டியது. மேலும் துதிக்கையால் உடலில் மண்ணை வாரி வீசியவாறு ஆக்ரோஷமாக காணப்படுகிறது. 

எனவே கும்கி யானையை கட்டுப்படுத்துவது குறித்து முதுமலை வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மதம் பிடித்து உள்ளதால் அந்த கும்கி யானையை மீண்டும் முதுமலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Next Story