கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பலி 270 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 20-ந் தேதி அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். உடல் நலக்குறைவு காரணமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
தலைமை ஆசிரியர்
வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் கொரோனோ வைரஸ் தொற்று விதிமுறைகளின்படி எரியூட்டப்பட்டது.
270 பேர் பாதிப்பு
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 270 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 171 பேர் சிகிச்சையில் குணமடைந்து நேற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 719 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 417 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story