கோவையில் முழு ஊரடங்கு கடைகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டன

முழு ஊரடங்கையெட்டி கோவையில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.
கோவை
முழு ஊரடங்கையெட்டி கோவையில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
போலீசார் கண்காணிப்பு
அத்துடன் பஸ், லாரி, ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகளின் சந்திப்பு பகுதியில் தடுப்புகள் வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். டவுன்ஹாலில் இருந்து உக்கடம் செல்லும் சிக்னல் பகுதியில் போலீசாருடன் சி.ஆர்.பி.எப். வீரர்களும் இணைந்து துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசியமின்றி வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
அத்தியாவசிய பணிகள்
அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் கொண்டு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.
சில ஓட்டல்களில் உணவுகளை சப்ளை செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களை போலீசார் அனுமதித்தனர்.
சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கையொட்டி கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்காததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
ஒருசில முதியவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பழங்கால விளையாட்டான தாயம், பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
முழு ஊரடங்கால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை -அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் ஒப்பணக்காரவீதி, பெரியக்கடை வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், நஞ்சப்பா ரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவில்வீதி, மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
கோவை காந்திபுரம் டவுன் மற்றும் மத்திய பஸ் நிலையங்கள் பஸ் மற்றும் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. காந்திபுரம் 2 அடுக்கு மேம்பாலம் உள்பட கோவையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் வெறிச்சோடின.
எளிமையாக நடந்த திருமணங்கள்
வி.கே.கே.மேனன் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் ஆட்கள் நடமாற்றம் இன்றி காணப்பட்டதால் ஆடு, மாடுகள் சர்வசாதாரணமாக சாலையை கடந்தும், சாலையின் நடுவேயும் சென்றன.
சில கடைகளில் பெயிண்ட் அடித்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் இளைஞர்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடினார்கள். முகூர்த்த நாள் என்பதால் சில திருமணங்கள் 50 பேர் பங்கேற்று வீடுகளில் எளிமையாக நடந்தன.
திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்களை போலீசார் மறித்து திருமண அழைப்பிதழ் உள்ளதா? என்று கேட்டு அனுப்பிவைத்தனர். அவ்வாறு திருமண அழைப்பிதழ் இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.
கிருமி நாசினி தெளிப்பு
சாலையோரம் வசிப்பவர்கள் உணவின்றி அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு அம்மா உணவகங்கள் செயல்பட்டன. கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பஸ்நிறுத்தத்தில் ஏராளமானவர்கள் உணவுக்காக நின்று இருந்தனர்.
அவர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் வாகனங்களில் வந்து உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர்.கொரோனா தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story