கொரோனாவுக்கு பலியானவரின் உடலை எடுத்து செல்ல ரூ.16 ஆயிரம் வாங்கிய ஆம்புலன்ஸ் உரிமையாளர், டிரைவர் கைது

பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவரின் உடலை எடுத்து செல்ல ரூ.16 ஆயிரம் வாங்கிய ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு மத்திகெரேயை சேர்ந்தவர் பவ்யா. இவரது தந்தை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி பவ்யாவின் தந்தை உயிர் இழந்தார். இதையடுத்து, ஹெப்பாலில் பவ்யாவின் தந்தை உடல் வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து மயானத்திற்கு தனது தந்தையின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல பவ்யா முயன்றார்.
அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உரிமையாளர், பவ்யாவிடம் ரூ.60 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டு இருந்தனர். உடனடியாக பவ்யா தான் அணிந்திருந்த தங்க நகையை கழற்றி கொடுத்திருந்தார். அதனை வாங்க மறுத்துவிட்டு பணம் கொடுக்கும்படி 2 பேரும் கேட்டு இருந்தனர். இதையடுத்து, வட்டிக்கு கடன் வாங்கி ரூ.16 ஆயிரத்தை டிரைவர், உரிமையாளரிடம் பவ்யா கொடுத்திருந்தார். அதன்பிறகே, பவ்யாவின் தந்தை உடலை ஆம்புலன்சில் மயானத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் பவ்யா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர், உரிமையாளரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவரான அனுமந்தப்பா(வயது 30), உரிமையாளர் ஹரீஷ்(45) ஆகிய 2 பேரையும் அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆம்புலன்சும் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது சட்டவிரோதமானது என்பதால், 2 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story