உதவித்தொகை கோரி கரகாட்டம் ஆடி கலெக்டரிடம் மனு


உதவித்தொகை  கோரி கரகாட்டம் ஆடி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 April 2021 1:42 AM IST (Updated: 27 April 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

உதவித்தொகை வழங்க வேண்டும் என கரகாட்டம் ஆடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சி, ஏப். 27-
கொரோனாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என கரகாட்டம் ஆடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரகாட்டம் ஆடி மனு
திருச்சி மாவட்ட நாட்டுப்புற நாதஸ்வரம், நையாண்டி மேளம், கரகாட்டம் குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் வந்தனர். அவர்கள் கரகாட்டம் ஆடியும், மேளம் அடித்தும், நாதஸ்வரம் வாசித்தும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த கலை நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ரூ.5 ஆயிரம் உதவித்தொகை
தற்சமயம் அரசின் தீவிர கட்டுப்பாட்டினால் எந்தவிதமான பணியும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு இந்த தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. ஆதலால் தமிழக அரசு முறையாக பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை கொரோனா காலம் முடியும் வரை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
ஆட்டோ ஓட்டுனர்கள் மனு
சுதந்திர மீட்டர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் அதன் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் 'சுதந்திர மீட்டர் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் மாநகராட்சி பகுதியில் உள்ள 65 வார்டுகளிலும் தலா இரண்டு சுதந்திர மீட்டர் ஆட்டோ வாகனத்தை அவசர தேவைகளுக்கும், முதியோர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், நோயாளிகளுக்கும், மருந்தகங்கள் சென்றுவர கட்டணமில்லா இலவச சேவை செய்ய வழங்க அனுமதிக்க வேண்டும், இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்க வேண்டும், இரவு நேர பணிக்கு செல்லும் கொரோனா முன் களப் பணியாளர்கள், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று திரும்ப, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கி சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
வீடுகளை இடிக்க கூடாது
ஸ்ரீரங்கம் தாலுகா பேரூரை சேர்ந்த தமிழரசி உள்ளிட்ட 4 பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் 1997-ம் ஆண்டு அப்போதிருந்த திருச்சி மாவட்ட கலெக்டர் அரசுக்குச் சொந்தமான காலி மனையில் வீடு கட்டிக்கொண்டு வசிக்க எங்களுக்கு அனுமதி வழங்கினார். தற்போது, அந்த வீடுகளை இடித்து விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதனை இடிக்ககூடாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Next Story