எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை

எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் துர்நாற்றம் வீசும் தெப்பக்குளத்தை சுத்தம் செய்து பராமரிக்க வலியுறுத்தி நேற்று ஆட்டோ ஓட்டுனர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் கும்பலாக வந்தனர். அவர்கள் திடீரென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எட்டயபுரம் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோரிக்கை
பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் கணேசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எட்டயபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள தெப்பக்குளத்தில் மழைநீரோடு தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் தேங்குவதால் கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. மேலும் நகரில் உள்ள இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாலும். கழிப்பறை கழிவுகள் செல்வதாலும் குளத்திலிருந்து மோசமான நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாட்களாக குளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. இந்த குளத்தை கடந்துதான் பஸ்நிலையம், அரசு மருத்துவமனை, நூலகம், மார்க்கெட் என முக்கியமான இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.
சுகாதாரக்கேடு
இந்த நிலையில் தெப்பக்குளம் சுகாதாரக்கேடாக மாற்றப்பட்டு, துர்நாற்றம் வீசி வருகிறது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தெப்பக்குளம் சுகாதாரக்கேடாக மாற்றப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கு நோய்தொற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அதிகாரி உறுதி
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல்அலுவலர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story