கர்நாடகாவில் இருந்து புதுக்கோட்டைக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து புதுக்கோட்டைக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் குட்கா பொருட்கள் பண்ணாரி சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக செல்லும் அனைத்து வாகனங்களும் பண்ணாரி அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை வழியாகத்தான் செல்கின்றன. அதேபோல் அங்கிருந்து வரும் லாரி, வேன், கார், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் திம்பம் மலைப்பாதை வழியாகத்தான் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றன. அதனால் பண்ணாரியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசார் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் சந்தேகம் இருந்தால் அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்வார்கள்.
இந்தநிலையில் அந்த வழியாக வேனில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று காலை அந்த வழியாக சென்ற வாகனங்களை தீவிரமாக கண்காணித்தார்கள்.
இதற்கிடையே சாக்குமூட்டைகளை ஏற்றிக்கொண்டு 2 வேன்கள் பண்ணாரி சோதனை சாவடியை கடந்தன. அந்த வேன்களை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் உடனே 2 வேன்களையும் நிறுத்தி அதன் டிரைவர்களிடம் விசாரித்தார்கள். அப்போது அவர்கள் பருத்தி மூட்டைகளை ஏற்றிச்செல்வதாக கூறினார்கள்.
ஆனாலும் போலீசார் பருத்தி மூட்டைகளை கீழே தள்ளி உள்ளே பார்த்தார்கள். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் சாக்குமூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் இருந்தன. உடனே போலீசார் குட்கா பொருட்களுடன் 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வேன்களையும், அதன் டிரைவர்களையும் சத்தி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள்.
அதைத்தொடர்ந்து போலீசார் டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில்,் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சல்மான்கான்முகமது (வயது 28), திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (45) ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும் 2 வேன்களில் சுமார் ரூ.23 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா குட்கா பொருட்களை கர்நாடக மாநிலம் கோழிபாளையத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சல்மான்கான்முகமது, பாலசுப்பிரமணியத்தை கைது செய்தார்கள்.
பண்ணாரிசோதனை சாவடியில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story