வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முக கவசம், கையுறை அணிந்து வரவேண்டும் கலெக்டர் கதிரவன் தகவல்

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முக கவசம், கையுறை அணிந்து வரவேண்டும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரங்கள் உள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் வருகிற 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு 2-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தபால் வாக்கு எண்ணுவதற்காக 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 4 மேஜைகள் தனியாக அமைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு வேட்பாளரும் வாக்கு எண்ணும் மேஜைகளுக்காக 14 முகவர்களையும், தபால் வாக்குகள் எண்ணப்படும் 4 மேஜைகளுக்கு தனியாக 4 முகவர்களையும் நியமித்து கொள்ளலாம்.
அனுமதி வழங்கப்படும் வேட்பாளர்கள், வேட்பாளரின் முதன்மை மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்துக்கு முக கவசம், கையுறை ஆகியவற்றை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். அவ்வாறு முக கவசம், கையுறை அணியாத நபர்கள் கண்டிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முக கவசமும், கையுறையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களே அவர்களுக்கு வழங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனைத்து முகவர்களும் 2-ந் தேதி காலை 7 மணிக்குள் வரவேண்டும். முகவர்கள் ஒரு பேனா அல்லது பென்சில், புள்ளி விவரங்களை குறித்து கொள்ள தேவையான காகிதங்கள் மட்டுமே கொண்டு வர வேண்டும். வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்படமாட்டாது. செல்போன் மற்றும் கூர்மையான பொருட்களை எடுத்து வர அனுமதியில்லை.
போலீசாரின் சோதனை முடிக்கப்பட்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதியின் கூடத்தில் ஒதுக்கப்பட்ட மேஜையின் முன்பு ஆஜராக வேண்டும். ஒதுக்கப்பட்ட மேஜையைவிட்டு அருகில் உள்ள மேஜைக்கு செல்லக்கூடாது. முகவர்கள் உணவு பொருட்கள், குடிநீர் எடுத்து வரவும் அனுமதி கிடையாது. முகவர்களுக்கான உணவு, தேநீர் ஆகியன மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும். அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னதாகவே செலுத்த வேண்டும்.
தபால் ஓட்டு எண்ணிக்கை 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்படும். தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் அதற்காக நியமிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு சென்றுவிட வேண்டும். அவர்கள் வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லை. முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முன் அடையாள அட்டையை போலீசாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
வாக்கு எண்ணும் மையங்களை இணைய தளம் மூலமாக நேரடியாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து முகவர்களும் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மற்ற முகவர்களுடன் தேவையற்றவற்றை பேசக்கூடாது. விதிமுறைகளை மீறி நடந்தால் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story