ஊரடங்கு தளர்வையொட்டி சேலத்தில் நகை, ஜவுளிக்கடைகள் திறப்பு

சேலத்தில் நகை, ஜவுளிக்கடைகள் திறப்பு
சேலம்:
ஊரடங்கு தளர்வையொட்டி நேற்று சேலத்தில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன.
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஏற்கனவே பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரம் சதர அடிக்கு மேல் இருந்த ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. இதனால் ஜவுளிகள் மற்றும் நகை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.
நகைக்கடைகள் திறப்பு
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் 2 நாட்கள் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகரில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை நேற்று திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்களும் நகைக்கடைகளுக்கு சென்று நகைகளும் மற்றும் ஜவுளி கடைகளுக்கு சென்று ஜவுளிகளும் வாங்கி சென்றனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கடைகள் திறக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story