கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை ஊழியர்களுடன் வாக்குவாதம்


கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை ஊழியர்களுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 10 May 2021 8:50 PM GMT (Updated: 10 May 2021 8:50 PM GMT)

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
சேலம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்தநிலையில், சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் அவர்கள் வரிசையில் நிற்காமல் அங்கும், இங்குமாக நின்றனர். இதை பார்த்த சுகாதார நிலைய ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குறைவாக வந்துள்ளது. ஆனால் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே, அருகில் உள்ள மற்ற சுகாதார நிலையங்களுக்கு சிலர் செல்லுமாறு தெரிவித்தனர். 
வாக்குவாதம்
அப்போது சிலர் 2-வது தவணை தடுப்பூசி போட வந்திருப்பதாக தெரிவித்தனர். அதற்கு ஊழியர்கள் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்படும் என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலை 7 மணி முதல் தடுப்பூசி போட காத்திருக்கிறோம் என்று கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சுகாதார நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தடுப்பூசி போடுவதற்கு வந்த பொதுமக்களை டாக்டர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் அனைவரையும் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

Next Story