கொரோனா நோயாளிகளின் உதவியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உதவியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்:
நோயாளிகளின் உதவியாளர்களுக்கு உணவு
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் உள்பட அனைத்து நோயாளிகளின் உதவியாளர்களுக்கு இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் மூலம் உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
இதன் தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கினார்.
கலெக்டர் விஜயலட்சுமி, வேலுச்சாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கொரோனா நோயாளிகளின் உதவியாளர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உணவு பொட்டலம்
கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால், நோய்தொற்றை தடுப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 45 ஆயிரத்து 200 பேருக்கு கோவில்கள் சார்பில் உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 2 ஆயிரத்து 434 கோவில்கள் உள்ளன. இதில் 39 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முழுஊரடங்கு காலத்தில் அனைத்து கோவில்களிலும் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை.
அதேநேரம் கோவில்களில் தினமும் பூஜைகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
மேலும் அன்னதானம் வழங்குவதை நிறுத்தாமல் பொதுமக்கள், குடிசை பகுதியில் வசிப்பவர்களுக்கு பொட்டலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
2 ஆயிரத்து 500 பேர்
அதேபோல் கொரோனா பாதிப்பு குறையும் வரை பக்தர்கள், பொதுமக்களுக்கு உணவு பொட்டலமாக வழங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உதவியாளர்கள் 2 ஆயிரத்து 500 பேருக்கு உணவு பொட்டலம் வழங்கப்படும்.
மேலும் கோவில்களுக்கு சொந்தமான மருத்துவமனை, சித்த மருத்துவமனைகளில் கபசுர குடிநீர், முககவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் இ.பெரியசாமி பேசினர்.
Related Tags :
Next Story