கொல்லம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்தனர் தாய், 2 குழந்தைகள் பரிதாப சாவு

கொல்லம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்தனர். இதில் தாய், 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இந்த துயரமான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
பெரும்பாவூர்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், குண்டாரா அருகே கேரளபுரம் இடவட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் எட்வர்டு என்கிற அஜித் (வயது 40). இவர் மருந்து கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வர்ஷா (28).
இவர்களுக்கு அனாகா (6), அலைன் (2) ஆகிய மகள்களும், 3 மாத கைக்குழந்தையான ஆரவ் என்ற மகனும் இருந்தனர். இதில் கைக்குழந்தை யான ஆரவ்க்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். அதில் அந்த குழந்தைக்கு குடலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், குடலில் அறுவை சிகிச்சையும் செய்தனர். பின்னர் வர்ஷா, முகத்தாலாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
3-வதாக பிறந்த மகனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததால், கணவன்-மனைவி இருவரும் சோகத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அஜித், முகத்தலாவுக்கு சென்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை குண்டாராவுக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாகியும் அஜித் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவருடைய வீட்டின் கதவை தட்டினார்கள். இருந்தபோதிலும் திறக்கவில்லை.
உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு 5 பேரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், 5 பேரையும் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் கைக்குழந்தை ஆரவ், அலைன், வர்ஷா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அஜித் மேல் சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூத்த மகள் அனாகா நலமாக இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த குண்டாரா போலீசார் அஜித் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அங்கு ஒரு கடிதம் இருந்தது அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில், குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குழந்தைகள் மற்றும் மனைவிக்கு கொடுத்துவிட்டு தானும் (அஜித்) குடித்தேன் என்று எழுதப்பட்டு இருந்தது.
இருந்தபோதிலும் அவர்கள் அனைவரும் விஷம் குடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story