சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் சோகம் படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் உறவினர்கள் கண்ணீர்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைக்காததால் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் உறவினர்கள் கண்ணீர் வடிக்கும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைக்காததால் ஆம்புலன்சில் கொரோனா நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் உறவினர்கள் கண்ணீர் வடிக்கும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
2-வது அலை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பலி எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. சேலம் அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரையில் 800 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. ஆனால் இந்த படுக்கைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது கூடுதலாக 150 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதி கிடைக்காமல் ஆஸ்பத்திரி வராண்டாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை
இதனிடையே, சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மூச்சுத்திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் நிலவுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் ஆம்புலன்சில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 5-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகள் கிடைக்காத காரணத்தால் நேற்று காலை 7-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்திருந்தனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் எப்படியாவது அவர்களது உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுததை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
நிரம்பி வழிகிறது
அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்ட காரணத்தால் நோயாளிகள் தாங்கள் வந்த ஆம்புலன்சில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளில் யாரேனும் குணம் அடைந்தால் மட்டுமே அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். அதன் பிறகே வரிசைப்படி நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் செய்து தரப்படும் என்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சொல்லப்போனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
எனவே கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்த்து பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு போலீஸ் மற்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேசமயம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், சேலம் மாநகரில் திருமண மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story