ஆண்கள் விடுதியை விரிவுபடுத்த கடன் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி 3 பேர் கைது


ஆண்கள் விடுதியை விரிவுபடுத்த கடன் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2021 7:51 AM IST (Updated: 15 May 2021 7:51 AM IST)
t-max-icont-min-icon

ஆண்கள் விடுதியை விரிவுபடுத்த ரூ.4 கோடி கடன் தருவதாக கூறி ரூ.25 லட்சம் வரை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை வேளச்சேரி பேபி நகரை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (வயது 35). ஆண்கள் விடுதி நடத்தி வருகிறார். இவர், தனது விடுதியை விரிவுபடுத்துவதற்காக ரூ.4 கோடி கடன் கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு மனு செய்து இருந்தார்.

அப்போது தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி முரளிகிருஷ்ணனிடம் செல்போனில் பேசிய வாலிபர், எந்தவித அடமானமும் இல்லாமல் ரூ.4 கோடி கடன் தருவதாக கூறினார்.

அதை நம்பிய முரளிகிருஷ்ணன், காப்பீட்டு முன்பண தொகையாக ரூ.20 ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார். அதன்பிறகு கடந்த 2 வருடங்களாக கடன் கொடுக்காமல் தொடர்ந்து இன்சூரன்ஸ் தொகை கட்டவேண்டும் என கூறி சிறுக சிறுக ரூ.25 லட்சம் வரை ஏமாற்றி பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு அந்த வாலிபரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக அடையார் போலீஸ் துணை கமிஷனர் விக்ரமனிடம் முரளிகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இது ஆன்லைன் மோசடி என்பதால் அடையார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெய பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் திருச்சி தில்லை கங்கா நகரில் அமர்நாத் (30) என்பவருடன் சேர்ந்து சஞ்சய் (27), சையத் அப்துல்லாஹ் (27) ஆகியோர் போலி நிதி நிறுவனத்தை நடத்தி, இதுபோல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து தரமணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், பயன்படுத்திய செல்போன்கள், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலி நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.

கைதான அமர்நாத், சஞ்சய் ஆகிய இருவரும் ஏற்கனவே திருவள்ளூர் போலீசாரால் மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதும், ஒரு மாதத்துக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிந்தது. மீண்டும் அதே பாணியில் கடந்த 2 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து தரமணி போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story