திருக்குறுங்குடியில் மாங்காய் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை


திருக்குறுங்குடியில் மாங்காய் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 17 May 2021 1:00 AM IST (Updated: 17 May 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடியில் மாங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏர்வாடி, மே:
திருக்குறுங்குடியில் மாங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். 

மாந்தோப்புகள்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் மாந்தோப்புகள் உள்ளன. இங்கு நீலம், கலர், சேலம், பெங்களூரான், பங்கனப்பள்ளி, கலப்பாடு, அல்போன்சா, மல்கோவா உள்ளிட்ட பல்வேறு ரக மாங்காய்கள் விளைவிக்கப்படுகிறது. 
பொதுவாக மே மாதம் மாங்காய் சீசன் தொடங்கும். அதுபோல இந்தாண்டு சீசன் தொடங்கியபோது மாங்காய் விலை கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.100 வரை விற்பனையானது. அடுத்த சில நாட்களில் மாங்காய் விலை படிப்படியாக குறைந்தது. 

விலை வீழ்ச்சி

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் மாங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ மாங்காய் ரூ.5-ல் இருந்து ரூ.10 வரை மட்டுமே விற்பனை ஆகிறது.
ஊரடங்கு காரணமாகவும், விலை சரிந்ததாலும் வியாபாரிகள் மாங்காய்களை பறிக்க முன்வரவில்லை. இதனால் மாங்காய்கள் மரங்களிலேயே பழுத்து, அழுகி நாசம் அடைகின்றன. ஏராளமான மாங்காய்கள் அழுகி கீழே விழுந்து மாந்தோப்புகளில் சிதறி கிடக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் வியாபாரிகளும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். 

கோரிக்கை

மேலும் பழக்கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்படுவதால் அங்கும் அதிகளவில் மாம்பழங்கள் வாங்குவதில்லை என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே மாங்காய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், அதை நம்பியுள்ள வியாபாரிகளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இரவு 9 மணி வரை பழக்கடைகளை திறக்க அரசு தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து திருக்குறுங்குடியை சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு, நாகர்கோவிலை சேர்ந்த வியாபாரி முருகேசன் ஆகியோர் கூறும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளுக்கும் மாங்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் ஜி.எஸ்.டி. பிரச்சினையால் வெளிநாட்டு ஏற்றுமதி நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த ஆண்டும் கொரோனா பரவலை முன்னிட்டு மாங்காய் விலை அடிமாட்டு விலைக்கு சென்றது. தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று வேதனை தெரிவித்தனர்.

Next Story