தனியார் கம்பெனியில் கீழே கொட்டிய பெயிண்டை சுத்தம் செய்தபோது உடலில் தீப்பிடித்து தொழிலாளி சாவு


தனியார் கம்பெனியில் கீழே கொட்டிய பெயிண்டை சுத்தம் செய்தபோது உடலில் தீப்பிடித்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 17 May 2021 3:10 AM IST (Updated: 17 May 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி, தனியார் கம்பெனியில் கீழே கொட்டிய பெயிண்டை சுத்தம் செய்தபோது உடலில் தீப்பிடித்து எரிந்தது தொழிலாளி பரிதாபமாக இறந்து விட்டார்.

பூந்தமல்லி, 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிப்லாப் பத்ரா (வயது 20). இவர், குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூரில் தங்கி, குன்றத்தூர் நடைபாதை தெருவில் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த பிப்லாப் பத்ரா, தவறுதலாக பெயிண்டை கீழே கொட்டிவிட்டார். அதை சுத்தம் செய்வதற்காக பெயிண்டின் மீது தின்னரை ஊற்றி துடைத்து கொண்டிருந்தார். மேலும் பெயிண்டை முழுமையாக எடுக்க இரும்புத்தகடால் தரையை சுரண்டியபோது ஏற்பட்ட தீப்பொறி தின்னரில் பட்டு பிப்லாப் பத்ரா உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிப்லாப் பத்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story