சங்கரன்கோவிலில் தரமான தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

சங்கரன்கோவிலில் தரமான தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில், மே:
சங்கரன்கோவில் நகரில் உள்ள ஆதிசங்கரர் விநாயகர் கோவில் தெரு, முத்துராமலிங்கபுரம் தெரு ஆகியவற்றில் புதிதாக சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ஆதிசங்கரர் விநாயகர் கோவில் தெருவில் நேற்று முன்தினம் பழைய சாலையை அகற்றும் பணி நடைபெற்றது. நேற்று அகற்றிய பழைய சாலையை எடுக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று முத்துராமலிங்கபுரம் தெருவில் பழைய சாலையை அகற்றும் பணி தொடங்கியது. இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பொக்லைன் எந்திரம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், பழைய சாலையை முழுவதுமாக அகற்றிவிட வேண்டும். மேலும் அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும். அப்படி சாலை அமைக்கும்போது, ஆழமாக தோண்டி தரமான சாலை அமைக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் செல்லாது என்று கூறினர். அவர்களிடம் நகராட்சி அலுவலர்கள், வேலையை நிறுத்திவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story