சேலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்- வார்டன்கள் 3 பேர் பணி இடைநீக்கம்


சேலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து  கைதி தப்பி ஓட்டம்- வார்டன்கள் 3 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 22 May 2021 3:43 AM IST (Updated: 22 May 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து கைதி தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக வார்டன்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம்:
சேலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து கைதி தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக வார்டன்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள எலத்தூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43). இவர் ஊத்துக்குளி அருகே உள்ள முருகன் கோவிலின் காவலாளியை கொலை செய்து அங்கிருந்த வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் திடீரென தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு வெங்கடேசை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே கடந்த 19-ந் தேதி அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தப்பி ஓட்டம்
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை சிகிச்சைக்காக அன்னதானப்பட்டி மணியனூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்றனர். அவரது பாதுகாப்பிற்காக 3 வார்டன்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இரவில் கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த வார்டன்கள், அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சாப்பிட செல்லும் நேரத்தில் வெங்கடேஷ் கைவிலங்கை கழட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் பணி இடைநீக்கம்
இதனிடையே தப்பி ஓடிய வெங்கடேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் வெங்கடேசை தேடி வருகின்றனர். இதனிடையே கொரோனா வார்டில் இருந்து கைதி தப்பியது தொடர்பாக சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் விசாரணை நடத்தினார்.
பின்னர் பணியில் கவனக்குறைவாக இருந்த வார்டன்கள் புஷ்பராஜ், ரவிக்குமார், சதீஷ் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து சூப்பிரண்டு உத்தரவிட்டார். தப்பி சென்ற கைதியால் பிறருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story