ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து நாசம்


ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து நாசம்
x
தினத்தந்தி 22 May 2021 8:39 PM IST (Updated: 22 May 2021 8:39 PM IST)
t-max-icont-min-icon

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து நாசம்

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் 108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து நாசமானது.  அதில் இருந்த கொரோனா நோயாளியை ஊழியர் காப்பாற்றினார்.

108 ஆம்புலன்ஸ்

கோவை வரதராஜபுரத்தில் 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டார். மேலும் அவரது உடல் நலம் மிகவும் மோசமடைந்தது. 

உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நேற்று காலையில் கொண்டு சென்றனர். அங்கு ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
 
இதையடுத்து, ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் பயன்படுத்தி அந்த பெண்ணை கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை 7.50 மணிக்கு கொண்டு வந்தனர். அங்குள்ள கொரோனா சிகிச்சை பிரிவு அருகே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது.

தீப்பிடித்தது

அங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்க வில்லை. இதனால் ஆம்புலன்சில் சுமார் 3 மணி நேரம் அந்த பெண் நோயாளி காத்திருந்தார். இதன் காரணமாக ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று தீர்ந்தது. 

இதையடுத்து, அந்த நோயாளிக்கு 2-வதாக ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. அப்போது, சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக பயங்கர சத்தத்துடன் திடீரென்று வெடித்ததில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியது.

நோயாளி மீட்பு

உடனே ஆம்புலன்ஸ் ஊழியர் தங்கபாலு (வயது29) விரைந்து செயல்பட்டு வேனுக்குள் இருந்த கொரோனா நோயாளியை மீட்டு வெளியே கொண்டு வந்து வார்டுக்கு கொண்டு சென்றார். 

அதற்குள் ஆம்புலன்சில் தீ வேகமாக பரவி எரிந்தது. அந்த பகுதி புகை மண்டலமானது. இதை பார்த்ததும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை. 

இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து ஆம்புலன்சில் எரிந்த தீயை அணைத்தனர். 

ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்ததால் கொரோனா சிகிச்சை பிரிவில் சுமார் 3 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. 

கலெக்டர் விசாரணை

108 ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்தாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார். இது சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் நாகராஜன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். 

ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியதும் நோயாளியை காப்பாற்றிய ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து  ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story