ஊரடங்கு தளர்வில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது காய்கறிகள் விலை கடும் உயர்வு


ஊரடங்கு தளர்வில் கடைவீதிகளில்  பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது காய்கறிகள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 23 May 2021 11:02 PM IST (Updated: 23 May 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்தது.

புதுக்கோட்டை:
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாகி வருகிற நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலானது. இந்த நிலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் தளர்வில்லாத முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலைக்கு மேலும், நேற்று ஒரு நாளும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. 
கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பொதுப்போக்குவரத்தும் தொடங்கியது. புதுக்கோட்டையிலும் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருந்தன. பஸ்களும் ஓடத்தொடங்கின. தொடர்ந்து நேற்றும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்க கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட வீதிகளில் காலை முதலே குவிந்தனர்.
பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் சாரை, சாரையாக சென்றன. பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் ஒரு கட்டத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறந்திருந்தாலும் கூட்டம் அதிகமாக இருக்காது. 
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வில் பொதுமக்கள் குவிந்ததால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதை போல இல்லாமல் இருந்தது. பண்டிகை நாட்களில் அலைமோதும் கூட்டத்தை போல காணப்பட்டது.
காய்கறிகள் விலை உயர்வு
அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்களை மொத்தமாக பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். காய்கறிகளின் விலைகள் நேற்று கடுமையாக உயர்ந்திருந்தன. அனைத்துவிதமான காய்கறிகளின் விலைகள் ஏறியிருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இருப்பினும் அதனை கொடுத்து விலை வாங்கிச்சென்றனர். கொரோனா பரவல் அதிகமாக இருக்கிற நிலையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 
மேலும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். மேலும் கடைவீதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
டவுன் பஸ்கள்
பொதுமக்கள் எந்தவித அச்சம் இல்லாமலும் ஒட்டுமொத்தமாக குவிந்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேதனை அடைந்தனர். காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வீடு, வீடாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் தொற்று பாதிப்பு அதிகமாகக்கூடிய நிலை உருவானதாக சமூகஆர்வலர்கள் கவலை அடைந்தனர். பஸ்களில் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் பயணம் செய்தனர். டவுன் பஸ்கள் நேற்று காலை முதல் இயக்கப்பட்டன. இதில் கிராமப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் புதுக்கோட்டை டவுனுக்கு வந்து சென்றனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளைசேர்ந்தவர்கள், மற்றும் அருகிலுள்ள தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று கறம்பக்குடிக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்க குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடைகளில் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஒலிபெருக்கி மூலமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், நேரடியாகச் சென்று எச்சரிக்கை விடுத்தும் மக்கள் பொறுப்பை உணராமல் பொருட்களை வாங்கிச் செல்வதிலேயே ஆர்வம் காட்டினர்.
இதேபோல் வியாபாரிகளும் ஒரே நாளில் ஒரு வாரத்திற்கான விற்பனை செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, சமூக இடைவெளியை பின்பற்றவோ, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே வேளையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையை நேரம் செல்ல செல்ல கூடுதல் விலைக்கு விற்பதிலேயே குறியாக இருந்தனர். ஜவுளி மற்றும் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்களின் விலை 2 மடங்கு உயர்த்தி விற்கபட்டது.
ஆலங்குடி, கீரனூர், திருவரங்குளம், ஆதனக்கோட்டை 
ஆலங்குடி, கீரனூர், திருவரங்குளம், ஆதனக்கோட்டை பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. அனைத்து கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். காய்கறிகள், மளிகை பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. எண்ணெய், பருப்பு வகைகள் இரு மடங்கு விற்பனை செய்யப்பட்டது. பொருட்கள் வாங்க வந்த வாகன ஓட்டிகளால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீன், இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

Next Story