பஸ்கள் இயக்கப்பட்டதால் அதிக அளவில் பயணிகள் தஞ்சை வருகை
கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்பட்டதால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பயணிகள் அதிகளவில் தஞ்சை வந்தனர். வேலை காரணமாக சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பினர்.
தஞ்சாவூர்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்பட்டதால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பயணிகள் அதிகளவில் தஞ்சை வந்தனர். வேலை காரணமாக சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பினர்.
கொரோனா பரவல்
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு ஒரு வாரம் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து ஊரடங்கில் தளர்வினை ஏற்படுத்தி கடைகளை திறக்கவும், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை பஸ்கள் இயக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
கூட்ட நெரிசல்
வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்லவும், வேலைக்காக சென்றவர்கள் சொந்த ஊர் திரும்பவும் வசதியாக இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் தஞ்சையிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிற பகுதிகளுக்கு கூட்ட நெரிசலை பொருத்து பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சையில் நகரப் பேருந்துகள் 30 சதவீத அளவே இயக்கப்பட்டன.
அதிக அளவில் பஸ்கள்
தஞ்சையிலிருந்து மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த அளவே பயணிகள் சென்று வந்தனர். ஆனால் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. இந்தப் பகுதிகளிலிருந்து வந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
வேலை காரணமாக தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சென்னை கோவை திருப்பூர் போன்ற இடங்களுக்குச் சென்றவர்கள் முழு ஊரடங்கு காரணமாக மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்த வண்ணமிருந்தனர். இதேபோல் வெளியூரிலிருந்து திருவாரூர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வதற்கு வசதியாகவும் தஞ்சையிலிருந்து திருவாரூர், நாகை, மன்னார்குடி, கும்பகோணம் போன்ற இடங்களுக்கும் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்காலிக பஸ் நிலையம்
இதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அதிக அளவில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பயணிகளின் வருகையை பொருத்து தேவையான இடங்களுக்கு பஸ்கள் அனுப்பப்பட்டு வந்தன. இதுபோல் தஞ்சைக்கு அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திலும் பஸ்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கு பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
Related Tags :
Next Story