சேலத்தில் மளிகை கடைக்காரரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளையடித்த 2 ஊழியர்கள் கைது-மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் மளிகை கடைக்காரரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளையடித்த 2 ஊழியர்கள் கைது-மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 May 2021 4:37 AM IST (Updated: 24 May 2021 4:37 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மளிகை கடைக்காரரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளையடித்து சென்ற ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்:
சேலத்தில் மளிகை கடைக்காரரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளையடித்து சென்ற ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மளிகை கடை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 35). இவர் சேலம் செவ்வாய்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உள்ளார். இவரது கடையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் (27), மங்கள்ராம் (28), சுரேஷ் (27) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
திட்டம் தீட்டினர்
3 ஊழியர்களும் கடையின் மேல் மாடியிலேயே தங்கி உள்ளனர். கடையின் 2-வது தளத்தில் மோகன் குமாரின் வீடு உள்ளது. அதில் தற்போது அவர் மட்டும் தங்கி வருகிறார்.
கடையின் உரிமையாளர் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட 3 பேரும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். இதற்காக கடந்த 21-ந்தேதி இரவு திடீரென்று 3 பேரும் வீட்டிற்குள் புகுந்து மோகன்குமாரை கடுமையாக தாக்கி அவரை கட்டிப்போட்டனர்.
ரூ.50 லட்சம்
பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மோகன்குமார் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார், கொள்ளையர்களை பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது கொள்ளையர்கள் வெளி மாநிலத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடினர். இந்த நிலையில் கொள்ளையர்கள் 3 பேரும் மராட்டியம் செல்லும் ரெயிலில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் மராட்டிய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செல்போன் டவர் மூலம் கண்காணித்தனர். 
 அப்போது கொள்ளையர்கள் 3 பேரும் மராட்டிய மாநிலம் ஜெல்கான் ரெயில் நிலையம் சென்றிருப்பது தெரியவந்தது. உடனே மராட்டிய போலீசார் அங்கு சென்று மங்கள்ராம், சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சத்தை மீட்டனர். பின்னர் கொள்ளையர்கள் இருவரையும் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாசை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story