ஈரோட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 232½ கிலோ கஞ்சா பறிமுதல்- கணவன், மனைவி கைது; 4 பேருக்கு வலைவீச்சு

ஈரோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 232½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கணவன்- மனைவியை போலீசார் கைது செய்து, மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 232½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கணவன்- மனைவியை போலீசார் கைது செய்து, மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கஞ்சா பதுக்கல்
ஈரோடு சோலார் வசந்தம் நகர் கோல்டன் சிட்டியில், போதை பொருளான கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கோல்டன் சிட்டியை சேர்ந்த கேசவன் (வயது 34) என்பவரது வீட்டில் போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் கஞ்சா பொட்டலங்களை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கணவன்-மனைவி
இதைத்தொடர்ந்து கேசவன் மற்றும் அவரது மனைவி பிருந்தா (24) ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
கேசவன் மற்றும் பிருந்தாவுக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதி ஆகும். இவர்களுக்கு ஈரோடு நொச்சி நகர் பகுதியை சேர்ந்த மதன் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். வீட்டின் வாடகை பணத்தை மதனே கொடுத்து வந்துள்ளார்.
மதன் ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி, ரெயில் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் ஈரோட்டுக்கு கொண்டு வந்து அந்த வீட்டில் பதிக்கி வைப்பது வழக்கம்.
232½ கிலோ பறிமுதல்
பின்னர் அவர் ஈரோடு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்த கவுரி என்பவர் மூலம், ஈரோடு வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த அமீர் என்கிற அஜீஸ் ஆகியோர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவன், பிருந்தாவை கைது செய்தனர். மேலும் வீட்டில் 11 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 232½ கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மதன், கவுரி, சரவணன், அமீர் என்கிற அஜீஸ் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
Related Tags :
Next Story