கமிஷன் மண்டிகளில் காய்கறிகள் ஏலம்


கமிஷன் மண்டிகளில்  காய்கறிகள் ஏலம்
x
தினத்தந்தி 26 May 2021 6:41 PM IST (Updated: 26 May 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் கமிஷன் மண்டிகளில் காய்கறிகள் ஏலம் நடந்தது. இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரி காய்கறிகளை வாங்கி சென்றனர்.

உடுமலை
உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் கமிஷன் மண்டிகளில்  காய்கறிகள் ஏலம் நடந்தது. இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரி காய்கறிகளை வாங்கி சென்றனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலைவேகமாக பரவிவரும் நிலையில், அதைத்தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 24ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் மருந்து கடைகள், பால்கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட மற்ற எந்தகடைகளையும் திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடுமலையில் உழவர்சந்தை, தினசரி சந்தை மற்றும் காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
காய்கறி வாகனம்
அதேசமயம் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், அவர்கள் குடியிருக்கும் இடத்திலேயே கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. அதன்படி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் உடுமலை உழவர்சந்தை விவசாயிகள் நடமாடும் காய்கறி விற்பனை நிலையம் மூலமாகவீதி, வீதியாக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். உடுமலை நகராட்சி சார்பில் நகராட்சி பகுதியில் காய்கறி வியாபாரிகள் வீதி, வீதியாக சென்று காய்கறிகளைவிற்பனை செய்து வருகின்றனர். உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், தோட்டக்கலைத்துறை மற்றும் பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் மூலமாக காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது.
முழு ஊரடங்கையொட்டி ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை மற்றும் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி சந்தை ஆகியவையும் அடைக்கப்பட்டுள்ளன.
காய்கறி கமிஷன் மண்டி
உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தின் வடக்குபகுதியில் காய்கறிகமிஷன் மண்டிகள்உள்ளன.உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை இந்த கமிஷன் மண்டிகளுக்கு அதிக அளவில்கொண்டு வருவது வழக்கம். இந்த காய்கறிகள், கமிஷன் மண்டிகள் மூலம் ஏலம் விடப்படும். ஏலத்தில் வியாபாரிகள் கலந்துகொண்டு காய்கறிகளை ஏலத்தில் எடுத்து விற்பனைக்காக பல பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக உடுமலைநகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள காய்கறி கமிஷன் மண்டி24 ம்தேதி மற்றும் 25ம்தேதி ஆகிய 2நாட்கள் செயல்படவில்லை.அத்துடன் இந்த கமிஷன் மண்டிகளுக்கு செல்லும் வாரச்சந்தையின் முதல் நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது.
 வியாபாரிகள்
இந்த நிலையில் வாரச்சந்தையின் தெற்கு பகுதியில் உள்ள நுழைவு வாயில் நேற்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. வாரச்சந்தை வளாகத்தின் தெற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் காய்கறிகமிஷன் மண்டிகள் செயல்பட்டன. விவசாயிகள் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் காய்கறிகளை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 100 சரக்கு வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த காய்கறிகள் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் ஏறாளமானவியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரி காய்கறிகளை ஏலத்தில் எடுத்தனர்.
அந்த பகுதியில் ஏலம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு அடுத்தடுத்து வாகனங்களில் காய்கறிகள் வந்து கொண்டிருந்து. அதனால் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்த காய்கறிகளை ஏற்றிச்செல்வதற்கு வந்த சரக்கு வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில்உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வாகனங்கள் 
காய்கறிகளை ஏற்றி செல்வதற்கு, எப்போதும் வரும்சரக்குவாகனங்கள் மட்டுமல்லாது, தற்போது கொரோனா ஊரடங்கையொட்டி நகராட்சி, பேரூராட்சி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோரால்ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி வாகனங்களும் வந்திருந்தன. உடுமலை மட்டுமல்லாது பொள்ளாச்சி தாலுகா கோட்டூர், சமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள், காய்கறிகளை வாங்கி செல்வதற்காக வந்திருந்தன.
இந்த வாகனங்கள், காய்கறிகளை ஏற்றி செல்வதற்கு, கமிஷன் மண்டிகளில் ஏலம் முடிந்தபிறகு காலை 7மணிக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன. அதுவரை சுமார் 100 சரக்கு வாகனங்கள் ராஜேந்திரா சாலை மற்றும்கல்பனா சாலையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்தன. சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி இருசக்கர வாகனங்களிலும் கொண்டு சென்றனர்.

Next Story