திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 1 வயது குழந்தை சாவு


திருக்கோவிலூர் அருகே  கிணற்றில் தவறி விழுந்து 1 வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 29 May 2021 10:07 PM IST (Updated: 29 May 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறிவிழுந்து 1½ வயது குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருக்கோவிலூர்

கிணற்றடி பகுதியில்

திருக்கோவிலூர் அருகே உள்ள வடகரை தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(வயது 30). இவரது 1½ வயது மகன் ஹரிராம் நேற்று தனது வீட்டை ஒட்டியுள்ள கிணற்றடி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்துவிட்டான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர்கள் காப்பாற்றுங்கள், குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். குழந்தையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.

தீயணைப்பு வீரர்கள்

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி இறந்த குழந்தையின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பலியான குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி குழந்தை பலியான சம்பவத்தால் வடகரைதாயனூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

Next Story