நெல்லை மாநகரில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

நெல்லை மாநகரில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் குவிந்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகரில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் குவிந்தனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. இதனால் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.
இளைஞர்கள் குவிந்தனர்
இந்த நிலையில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பாளையங்கோட்டை தியாகராஜ நகர் புஷ்பலதா பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குமரேசன் நகர், சாய்பாபா காலனி, ராயல் காலனி, சங்கர் காலனி, தாவீது ராஜா நகர், ஸ்ரீராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் முகாம் நடைபெற்றது. முகாமை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் குவிந்தனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பெருமாள்புரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை போட்டனர். முகாமில் நலச்சங்க தலைவர் மதிவாணன், நிர்வாகிகள் அந்தோணி செல்வராஜ், பாஸ்கர சத்யசிங், மாரியப்பன், பிறவிப்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி
இதேபோல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பு குறைந்த அளவே மக்கள் வந்து சென்ற நிலையில், தற்போது ஊசி போட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று அங்கு ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story