கொரோனா அறிகுறி இருந்தால் சுய மருத்துவத்தில் ஈடுபட வேண்டாம்


கொரோனா அறிகுறி இருந்தால் சுய மருத்துவத்தில் ஈடுபட வேண்டாம்
x
தினத்தந்தி 30 May 2021 2:53 AM IST (Updated: 30 May 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 50 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் மக்கள் சுய மருத்துவத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 50 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா அறிகுறி இருந்தால் மக்கள் சுய மருத்துவத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு நடத்தினார். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி, மருத்துவ கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஆறுமுக வேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
50 ஆக்சிஜன் படுக்கைகள்
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன் விளைவாக பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. அதாவது 26 சதவீதமாக இருந்த தொற்றின் விகிதம் தற்போது 18 ஆக குறைந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து இருப்பது ஆறுதலை தருகிறது. இங்குள்ள அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்த, அதிகமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கூடுதலாக 50 ஆக்சிஜன் படுக்கைகள் நாளை (அதாவது இன்று) ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீவிரத்தன்மை குறைவு
குமரி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் கூடுவதும், குறைவதுமாக இருப்பதாக கேட்கிறீர்கள். எண்ணிக்கையில் சிறிய வித்தியாசங்கள் இருந்தாலும் தொற்று பாதிப்பின் தீவிரத்தன்மை குறைந்துள்ளது. ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். முழு ஊரடங்கு முடியும்போது தொற்று பாதிப்பு குறையும் என்று நம்புகிறோம். பலி எண்ணிக்கையை பொறுத்த வரையில் மருத்துவ குறைபாட்டால் ஏற்படுவது இல்லை. ஏராளமான மக்கள் சுய மருத்துவத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் நோய்த்தொற்று அதிகமான பிறகு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இதன் காரணமாக உயிர்பலி ஏற்படுகிறது.
எனவே சிறிய அறிகுறி இருந்தாலும் மக்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய மருத்துவத்தில் ஈடுபடுவதை குமரி மாவட்ட மக்கள் தவிர்க்க வேண்டும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவக்கல்லூரி டாக்டர்களிடம் கூறியுள்ளோம். எனினும் சிறு, சிறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி சப்ளை
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கையும் சரியாக சொல்லப்படுவது இல்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. பலி எண்ணிக்கை குறைவாக காட்டப்படுவதில்லை. காட்டவும் முடியாது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும், இதனால் நோயாளிகள் வெளியே சுற்றி வருவதாகவும் கூறுகிறீர்கள். ஆனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை பொருத்த வரையில் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியிடப்படுவது இல்லை. வெளியே பரிசோதனை செய்யப்படுவதில் காலதாமதம் இருப்பதாக நோட்டீஸ் வந்துள்ளது. நாங்கள் அது தொடர்பாக பேசியுள்ளோம். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக பரிசோதனை முடிவுகளை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லை. தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
ஆனால் தடுப்பூசி சப்ளை குறைவாக தான் இருக்கிறது. தற்போது மாநில அரசு அதிகபட்சமாக தடுப்பூசிகளை தந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் அதிகரிக்க கேட்டுள்ளோம். தடுப்பூசிகள் வரும் பட்சத்தில் அதை உடனடியாக மக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story