கொரோனா தொற்று பரவலை தடுக்க மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும்


கொரோனா தொற்று பரவலை தடுக்க மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Jun 2021 8:40 PM IST (Updated: 3 Jun 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவலை மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கி விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரம், நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விவரம், தடுப்பூசி முகாம்கள் குறித்தும், மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்ட
விவரங்கள், காய்ச்சல் முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நகராட்சி மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகரிக்கவும், நோய் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உரிய காரணமின்றி அரசு விதித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறி வீட்டை விட்டு வெளியில் வருபவர்களை மறித்து தக்க நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

காய்ச்சல் முகாம்கள்

அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி இயங்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த தெருவை தனிமைப்படுத்தி அங்கேயே காய்ச்சல் முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். உரிய அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் சுற்றினால் அதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் என்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்களும் ஒன்றிணைந்து தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் தாசில்தார்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story