கோவையில் 36 மையங்களில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


கோவையில்  36 மையங்களில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 Jun 2021 10:36 PM IST (Updated: 3 Jun 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 36 மையங்களில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை

கோவையில்  36 மையங்களில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி மையங்கள்

கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகளவு உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் தினமும் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பிரித்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்தநிலையில்  சென்னையில் இருந்து கோவைக்கு 48 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. 

இதையடுத்து மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

பொதுமக்கள் குவிந்தனர் 

கோவையில்  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 36 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

அதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் காலை 7 மணியில் இருந்தே ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். வெயில் அதிகளவு இருந்ததால் பொதுமக்களின் வசதிக்காக தடுப்பூசி மையங்களில் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தன.

அதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். 

பொதுமக்களின் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் வரிசையில் நிற்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினர்.

8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி தெளித்தல், வீடு வீடாக சென்று பொதுமக்களின் உடல் நலம் குறித்து விசாரித்தல், தடுப்பூசி போடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதில் தடுப்பூசி முகாமில் 36 மையங்களில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது என்றார்.


Next Story