சேலம் மாவட்டம் முழுவதும் 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சேலம் மாவட்டம் முழுவதும் 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாவட்டம் முழுவதும் 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி செலுத்த முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து 16 ஆயிரத்து 500 தடுப்பூசி டோஸ்கள் சேலத்திற்கு வரவழைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி மருந்துகளை மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் அனுப்பி வைத்து பொதுமக்களுக்கு போடும் பணியை மேற்கொண்டனர்.
சிறப்பு முகாம்
இதன்படி நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 50 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் நேற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மாவட்டத்தில் கிராமப் பகுதிகளிலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கும் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.
சுகாதாரத்துறைக்கு கடிதம்
இன்னும் ஒரு சில நாட்களில் மட்டுமே இருப்பு உள்ள தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படும். அதன்பிறகு தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஒரு சில மையங்கள் தவிர மற்ற அனைத்து மையங்களிலும் நேற்று மாலை தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டன. இதனால் மாவட்ட நிர்வாகம் சேலம் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்குமாறு சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
Related Tags :
Next Story