குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் சரக புதிய டி.ஐ.ஜி. ஏ.ஜி. பாபு பேட்டி

வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு கூறினார்.
வேலூர்
போலீஸ் டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய காமினி கடந்த 2-ந் தேதி மதுரை சரகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னையில் காவல்துறை நிர்வாகப்பிரிவில் பணியாற்றிய டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று வேலூர் அண்ணாசாலையில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற பின்னர் டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் சாலை விபத்து, கொலை, தற்கொலை போன்ற எந்த வகையான உயிரிழப்பாக இருந்தாலும் சரி. அதை தடுப்பதே முதன்மையான கடமையாகும். பொதுமக்களிடத்தில் காவல்துறையினர் நல்உறவை கொண்டிருக்க வேண்டும்.
காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் பணியாளர்கள் என்பதை காவலர்கள் உணர வேண்டும். அதேபோல் காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல், சாராயம் விற்பனை, ரவுடியிசம் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story