உடுமலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு


உடுமலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 10:05 PM IST (Updated: 7 Jun 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடுமலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

உடுமலை
முழு ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடுமலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றின்2-வதுஅலை பரவி வருவதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
அரசின் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடுமலையில் மத்திய பஸ்நிலையம் அருகே ரவுண்டானா பகுதி, பழைய பஸ் நிலையம்பகுதி, பொள்ளாச்சி சாலை-தளிசாலை சந்திப்பில் உள்ள சிக்னல்பகுதி, பொள்ளாச்சி சாலை-திருப்பூர் சாலை சந்திப்புபகுதி உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி, வாகன ஒட்டிகளிடம் விசாரித்து கொரோனா வைரஸ் தொற்று குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முககவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் அரசு, முழு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து நேற்று காலை முதல் அமல்படுத்தியுள்ளது.அதன்படி மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொதுமக்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வெளியில் வந்து சென்று கொண்டிருந்தனர். போலீசார் கேட்கும்போது மருத்துவமனைக்கு செல்கிறேன், மருந்து வாங்க செல்கிறேன் என்று கூறிவந்தனர்.இந்த நிலையில் மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், இறைச்சி கடைகள், மீன்கடைகள் ஆகியவற்றை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்று முழு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அமலுக்கு கொண்டுவந்தது. 
இதைத்தொடர்ந்து உடுமலையில் நேற்றுகார்கள் மற்றும்இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பொள்ளாச்சி-பழனி தேசிய நெடுஞ்சாலை, ராஜேந்திரா சாலை, திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை, தளி சாலை உள்ளிட்ட பல சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்திருந்தது.இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், போலீசார் சிறிது தூரத்தில் நிற்பதைக்கண்டதும் அந்த வழியாக செல்லாமல் வாகனத்தை திருப்பிக்கொண்டு, வேறு வழியாக சென்றனர்.அத்துடன் சில இடங்களில் சாலையோரம் கார்கள் பார்கிங் செய்து நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் அந்த இடங்களில் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
உடுமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேற்று பொள்ளாச்சி சாலை, பழனிசாலை, திருப்பூர் சாலை, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர், தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முககவசம் அணியாமல் இருந்த 12 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார். அத்துடன் போலீசார் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களிடம், கொரோனா பரவல் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story