தற்காலிகமாக 13 டாக்டர்கள், 25 செவிலியர்கள் நியமனம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க தற்காலிகமாக 13 டாக்டர்கள், 25 செவிலியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க தற்காலிகமாக 13 டாக்டர்கள், 25 செவிலியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா சிகிச்சை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஐ.சி.யூ. வார்டில் உள்ள 25 படுக்கைகளும் நிரம்பி உள்ளது. தினமும் 500 பேருக்கு மேல் தொற்று உறுதியாகி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தாலும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 12 கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருவதால், தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்காக மே ஹெல்ப் யூ என்ற உதவி மையம் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறை மூலம் தன்னார்வலர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிபுரிகின்றனர். அவர்கள் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கின்றனர்.
காலி பணியிடங்கள்
நீலகிரியில் 1,500-க்கும் மேல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டும் டாக்டர்கள், செவிலியர்கள் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளது. அதன் காரணமாக சிகிச்சை அளிப்பது சவாலாக இருக்கிறது. இதனால் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் அரசு டாக்டர்கள் வெளி நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை போன்றவற்றை கவனித்து வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பம் உள்ள டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்துக்கு என 30 டாக்டர் பணியிடங்கள், 40 செவிலியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது.
தடுப்பு பணி
அதன்படி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக 7 டாக்டர்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் 6 பேர் என மொத்தம் 13 டாக்டர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் 25 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் கொரோனா நோயாளிகளை கவனிப்பது, ஆக்சிஜன் வசதி செய்து கொடுப்பது, அறிவுரைகள் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story