பரமக்குடி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க 15 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது


பரமக்குடி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க 15 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 8 Jun 2021 11:46 PM IST (Updated: 8 Jun 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க 15 இடங்களில் தடுப்புகள் அமைப்பு

பரமக்குடி
பரமக்குடி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க 15 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவல்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகள், பழக்கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பரமக்குடி பகுதியில் நாள்தோறும் பொதுமக்களின் கூட்டம் அனைத்து பகுதிகளிலும் அலைமோதுகிறது. 
பெரியகடை பஜார், சின்னகடை பஜார், உழவர் சந்தை பகுதி, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் பொருட்கள் வாங்க கூட்டமாக கூடுகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் ஏராளமானோர் சுற்றித் திரிகின்றனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தியும் தடுக்க முடியவில்லை. 
தடுப்புகள்
ஆகவே பரமக்குடி நகராட்சி ஆணையாளர் செந்தில் குமரன் ஏற்பாட்டில் பொதுமக்கள் அதிகமாக வரக் கூடிய 15 இடங்களில் தகரம் மூலம் யாரும் வராதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்ட கலெக்டர் அறிவிக்கப்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சந்தக்கடை மினி விளையாட்டு அரங்கம், எமனேசுவரம் தனியார் பள்ளி ஆகிய இடங்களில் மட்டும் தினமும் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனாலும் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகளின்றி காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். 
ஆகவே கலெக்டர் அறிவித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. 
இதனால் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகவே அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story