மாவட்ட செய்திகள்

கண்டமனூரில் சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் மறியல் + "||" + Drivers protest to stop autos on the road

கண்டமனூரில் சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் மறியல்

கண்டமனூரில் சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் மறியல்
கண்டமனூரில் ஆட்ேடா நிலையத்திற்கு ஊராட்சி நிர்வாகம் தடுப்பு வேலி அமைத்ததால் ஆத்திரமடைந்த டிரைவர்கள் ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
கடமலைக்குண்டு:
கண்டமனூரில் ஆட்ேடா நிலையத்திற்கு ஊராட்சி நிர்வாகம் தடுப்பு வேலி அமைத்ததால் ஆத்திரமடைந்த டிரைவர்கள் ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். 
ஆட்டோ நிலையத்துக்கு வேலி
கண்டமனூர் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோ நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலைய பகுதி கண்டமனூர் உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் கண்டமனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கண்டமனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து உழவர் சந்தை வரை சிமெண்டு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது சாலைக்கு இடையூறாக இருந்ததாக நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்டோ நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் ஆட்டோ நிலையத்தை சுற்றிலும் ஆட்டோக்கள் நிறுத்தமுடியாதபடி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. 
சாலை மறியல்
இதற்கிடைேய நேற்று காலை ஆட்டோ டிரைவர்கள் வழக்கம்போல் ஆட்டோ நிலையத்துக்கு வந்தனர். அப்போது ஆட்டோ நிலையத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டு டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
இதையடுத்து ஆட்டோ நிலையத்துக்கு வேண்டுமென்றே தடுப்பு வேலி அமைத்ததாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கண்டமனூர்-தேனி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையை மறித்து ஆட்டோக்களை அவர்கள் நிறுத்தியிருந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆட்டோ டிரைவர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியை ஆட்டோ நிலையமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே தொடர்ந்து அதே இடத்தில் ஆட்டோ நிலையம் செயல்பட அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் மறியல் போராட்டம் தொடரும் என்றனர். 
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சுமார் 2 மணி நேரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன், தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அதிகாரிகள், அதுவரை ஆட்டோ நிலையம் தற்காலிகமாக அதே இடத்தில் செயல்பட அனுமதி அளித்தனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக கண்டமனூர்-தேனி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.