250 தற்காலிக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஊட்டி நகராட்சியில் தொற்று கண்டறியும் பணியில் ஈடுபடும் 250 தற்காலிக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க யாருக்கேனும் அறிகுறிகள் உள்ளதா? என வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி நடத்த தற்காலிக ஊழியர்கள் 250 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
அவர்களுக்கு தற்காலிகமாக ஒரு மாதம் பணிபுரிய நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு முககவசம், கையுறை, பல்ஸ் ஆக்சி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். வீடு, வீடாக சென்று குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர், சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உள்ளதா, கர்ப்பிணிகள் உள்ளனரா, சர்க்கரை, ரத்த அழுத்த பிரச்சினை இருக்கிறதா என்று கேட்டறிந்து பதிவேட்டில் குறித்துக்கொண்டனர்.
பின்னர் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதனை செய்தனர். ஆக்சிஜன் அளவு 94-க்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு கீழ் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. உடல் வெப்பநிலையை சோதனை செய்தனர். 250 தற்காலிக ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்துவதால் விரைவில் எத்தனை பேருக்கு அறிகுறிகள் தென்படுகிறது என்ற விவரங்கள் தெரியவரும்.
இதை அடிப்படையாக கொண்டு வட்டார மருத்துவ அலுவலரிடம் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அறிகுறி தென்படும் இடங்களில் சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்கள் 250 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story