காளான்களை குப்பையில் கொட்டும் விவசாயிகள்


காளான்களை குப்பையில் கொட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:50 PM IST (Updated: 11 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் காளான்களை விவசாயிகள் குப்பையில் கொட்டுகின்றனர். மேலும் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை தேயிலைக்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கினர். அதன்படி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காளான் உற்பத்தி செய்து வருகின்றனர். 

விளைநிலங்களில் பசுமை குடில்கள் அமைத்து, மொட்டு ரக காளான்களை பயிரிட்டு வருகிறார்கள். உற்பத்தி செய்யப்படும் காளான்கள் சென்னை, திருப்பூர், கோவை போன்ற வெளிமாவட்டங்கள், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. காளான் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து வழக்கம்போல் இல்லை. இதன் காரணமாக உற்பத்தி செய்த காளான்களை கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் வருவதில்லை. விவசாயிகள் தொழிலாளர்களை கொண்டு பசுமை குடில்களில் காளான்களை அறுவடை செய்தாலும், விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. 

மேலும் வாங்க ஆள் இல்லாததால் வீணாக போகும் நிலை காணப்படுகிறது. ஆனால் வாகனங்கள் மூலம் மக்களின் இருப்பிடங்களுக்கு காளான்களை பேக்கிங் செய்து கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் நீலகிரியில் விற்றாலும் குறைந்த அளவே காளான்களை விற்பனை செய்ய முடியும். மீதமுள்ளவற்றை குப்பையில் கொட்டுகின்றனர். விற்பனை செய்ய முடியாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காளான்கள் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- காளான் உற்பத்திக்கு தேவையான மூல பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து வராததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக முழு ஊரடங்கால் காளான்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் விற்பனை செய்ய முடியவில்லை. 

இதனால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளோம். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் காளான்களை வைத்திருந்தால் அழுகி வீணாகி விடும். எனவே எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story