பெற்றோரை இழந்து தவிக்கும் 4 சிறுவர்கள்


பெற்றோரை இழந்து தவிக்கும் 4 சிறுவர்கள்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:59 PM IST (Updated: 11 Jun 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே பெற்றோரை இழந்த 4 சிறுவர்கள் அரசு உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

அறந்தாங்கி, ஜூன்.12-
அறந்தாங்கி அருகே பெற்றோரை இழந்த 4 சிறுவர்கள் அரசு உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
ஒரே பிரசவத்தில்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பூவற்றகுடி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி மகமாயி. இவர்களுக்கு கபிலன் (வயது 17) மதுபாலன் (15), மதுஸ்டன் (15), மதுபிரியன் (15) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
இதில் மதுபாலன், மதுஸ்டன், மதுபிரியன் ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். கட்டிட வேலை பார்த்து வந்த ஆனந்தன் கடந்த 2011-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து  மகமாயி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து, 4 மகன்களையும் பூவற்றகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்து, குடும்ப செலவுகளையும் கவனித்து வந்தார். மகமாயியின் மூத்த மகன் கபிலன் தற்போதுதான் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.  மற்ற 3 பேரும் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
தாயும் சாவு
இந்தநிலையில் மகமாயி கிட்னி பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 17-ந் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
 இதனால் 4 மகன்களும் அனாதையானார்கள். இதனையடுத்து அவர்களது உறவினர்கள் 4 பேருக்கும் உணவு சமைத்து வழங்கினர். அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
உணவுக்கு திண்டாட்டம்
தற்போது, மகமாயியின் மூத்த மகன் கபிலன் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அவரது சகோதர்களுக்கு சமைத்து உணவு வழங்கி வருகிறார். ஆனால் உணவு பொருட்கள் சில நாட்களே இருக்கும் நிலையில் அவர்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் பெற்றோரை இழந்ததால் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ள எங்களுக்கு தமிழக அரசு உதவி செய்து, கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Next Story