உதவித்தொகைக்கான டோக்கன் பெற அலைமோதிய குடும்ப அட்டைதாரர்கள்

கொரோனா நிவாரண உதவித்தொகை-மளிகை பொருட்கள் பெறுவதற்கான டோக்கனை வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடத்தில் வழங்கியதால், அதனை பெற குடும்ப அட்டைதாரர்கள் அலைமோதினர்.
பெரம்பலூர்:
டோக்கன் வினியோகம்
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையின் இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வருகிற 15-ந்தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. இதற்காக நேற்று முதல் 14-ந் தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்காமல், அவர்கள் பொதுவான இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகித்து வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவ வாய்ப்பு
மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்காமல் ஒவ்வொருவரை ஒட்டிக்கொண்டு நின்று டோக்கன் பெற்று செல்கின்றனர். இதனால் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போது தான் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்காமல், பொது இடத்தில் வைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் டோக்கன் வினியோகிப்பது மீண்டும் கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே ரேஷன் கடை ஊழியர்களை அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story