பச்சை மலையில் கிழங்கு வியாபாரி கழுத்தை அறுத்து கொலை

பச்சை மலையில் முன்விரோதம் காரணமாக கிழங்கு வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
உப்பிலியபுரம்,
பச்சை மலையில் முன்விரோதம் காரணமாக கிழங்கு வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிழங்கு வியாபாரி
திருச்சி மாவட்டம் பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி பெரியசித்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 55). கிழங்கு வியாபாரி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு கலியபெருமாள், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜூவை விஷப்பூச்சி கடித்ததில் அவர் பார்வையை இழந்தார். இதனால் மற்றொருவர் துணையுடனே அவர் நடமாடி வந்தார். நேற்று முன்தினம் மாலை ராஜூ வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தார்.
கழுத்தை அறுத்து கொலை
அப்போது, அங்கு வந்த சேலம் மாவட்டம் கெங்கவல்லி மயிலக்குளம் மலைக்கிராமத்தை சோ்ந்த முத்துசாமி (55) ராஜூவுடன் தகராறு செய்துள்ளார். இதைப்பார்த்த ராஜூவின் மனைவி பார்வதி அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால் முத்துசாமி, பார்வதியை கீழே தள்ளிவிட்டு, தான் பையில் வைத்திருந்த கத்தியால் ராஜூவின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
உடனே பார்வதி சத்தம் போடவே, முத்துசாமியை அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து சுற்றிவளைத்து பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் முத்துசாமியை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் ராஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, பெரியசித்தூரில் உள்ள பெருமாள் கோவிலை இடித்த பிரச்சினையில் இரு பிரிவினரிடையே தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தனது கணவரை முத்துசாமி கொன்றுவிட்டதாகவும் பார்வதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் பச்சை மலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story