வேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் மண்ணுளி பாம்புகளை கடத்திய 3 பேர் கைது
வேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் மண்ணுளி பாம்புகளை கடத்திய 3 பேர் கைது
ராசிபுரம்:
வேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் மண்ணுளி பாம்புகளை கடத்தி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மண்ணுளி பாம்புகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 3 கொமாரபாளையம் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வெண்ணந்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது காரில் இருந்த 3 பேர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த காகித பைகளில் 2 மண்ணுளி பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
இதையடுத்து கார் டிரைவர் வேல்முருகன் (வயது 49), ஆல்பின் (48), வில்பிரின் (36) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து ராசிபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் கார் மற்றும் மண்ணுளி பாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் ராசிபுரம் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், ராசிபுரம் வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் 3 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வேலூரில் இருந்து தலா 4½ கிலோ எடை கொண்ட 2 மண்ணுளி பாம்புகளை அதிக விலைக்கு விற்க கன்னியாகுமரிக்கு கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். யாருக்கு விற்பனை செய்ய மண்ணுளி பாம்புகளை கடத்தி சென்றனர் என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story