இபதிவு பெற்று வாடகை கார் ஆட்டோக்கள் ஓடின


இபதிவு பெற்று வாடகை கார் ஆட்டோக்கள் ஓடின
x
தினத்தந்தி 14 Jun 2021 9:27 PM IST (Updated: 14 Jun 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

இபதிவு பெற்று வாடகை கார் ஆட்டோக்கள் ஓடின

கோவை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் படுத்தப்பட்டதை யடுத்து நேற்று முதல் கோவையில் இ-பதிவு பெற்று வாடகை ஆட்டோ, கார்கள் இயங்கின. இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகளும் திறக்கப்பட்டன.

முழு ஊரடங்கு

கொரோனா முதல் அலையை விட 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதி காய்கறி உள்பட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

அது எதிர்பார்த்த பலனை தரவில்லை. எனவே கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அது கடந்த 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனால் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தது. ஆனால் கோவை உள்பட 11 மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு கொரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை. 

ஆனாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கடந்த 8-ந் தேதி முதல் நேற்று வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கோவை மாவட்டத்தில் மளிகை, இறைச்சி, மீன், பலசரக்கு, காய்கறி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு

இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 21-ந் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பராமரிப்பு பணி உள்ளிட்டவைகள் இ-பதிவு பெற்று நடைபெற தொடங்கி உள்ளது.

பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன், கணினி மற்றும் எந்திரங்கள் பழுது பார்ப்பவர்கள், தச்சர் போன்றவர்கள் இ-பதிவு பெற்று வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

ஒர்க் ஷாப் திறப்பு

மேலும் மாவட்டத்தில் உள்ள சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் ஊரடங்கு காலத்தில் வாகனங்களை பழுது பார்க்க முடியாமல் அவதிப்பட்டவர்கள் தங்களின் வாகனங்களை ஒர்க் ஷாப்புக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து மெக்கானிக் ஒருவர் கூறுகையில் மாவட்டம் முழுவதும்  3500 ஒர்க் ஷாப்பு கடைகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் எதுவும் திறக்கப்பட வில்லை. 

இதனால் வாகனங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார். 

இதேபோல் வேளாண் உபகரணங்கள், பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகளும் காலையிலேயே திறக்கப்பட்டன. அந்த கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டன.

மண்பாண்டங்கள் விற்பனை

இது போல் மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள், கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. அந்த கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன.


இது குறித்து மண்பாண்டம் விற்பனை செய்வோர் கூறுகையில், ஏப்ரல், மே போன்ற வெயில் காலங்களில் கடைகள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் பானை வியாபாரம் பெரிய அளவில் இருக்காது என்றனர்.

போலீசார் வாகன சோதனை

இதைத்தொடர்ந்து இ-பதிவுடன் வாடகை ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் நேற்று இயங்கின. காரில் டிரைவர் தவிர 3 பயணிகளும், ஆட்டோவில் டிரைவர் தவிர 2 பயணிகளும் பயணம் செய்தனர். இதனால் சாலைகளில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்வதை காண முடிந்தது.

 இதையொட்டி  ஆட்டோ மற்றும் கார்களில் இ-பதிவு செய்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணிகள் செல்கிறார்களா என்று போலீசார் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடுபொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன. 

அவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்லாமல், அந்த நிறுவனம் ஏற்பாடு செய்த வேன் உள்ளிட்ட வாகனத்தில் பணிக்கு சென்றனர்.

கோவையில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முதல் இ-சேவை மையங்கள் நேற்று திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முதல் நாள் என்பதால் ஒரு சிலர் மட்டுமே இ -சேவை மையத்திற்கு வந்திருந்தனர்.


Next Story