நாமக்கல் பகுதியில் சாராயம், கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும்-புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


நாமக்கல் பகுதியில் சாராயம், கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும்-புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2021 6:37 PM GMT (Updated: 15 Jun 2021 6:37 PM GMT)

நாமக்கல் பகுதியில் சாராயம், கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்:
புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு
நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் காந்தி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சுரேஷ் (வயது 35) நியமிக்கப்பட்டார். இவர் நாமக்கல்லில் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்ற வழக்குகளை பொறுத்த வரையில் அவை நடக்கும் முன்பே தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாராயம், கஞ்சா விற்பனை, ரவுடியிசம் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்.
சந்தேக நபர்கள்
தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். நாமக்கல் நகரை குற்றம் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன்.
தற்போது நாமக்கல் நகரில் ஆங்காங்கே 1,179 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. நன்கொடையாளர்கள் மூலம் காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். குற்றங்களை தடுக்க பொதுமக்கள் பங்களிப்பு மிக அவசியம். எனவே பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை வண்டலூரில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் ஓராண்டு காலம் மதுரை மாவட்டத்தில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்.

Next Story